திருவொற்றியூரில் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 ஊழியர்கள் கைது

வேலை செய்து வந்த நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-09 09:43 GMT

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பு துறை மேலாளராக பணிபுரிந்து வரும் ஏசுதாஸ் என்பவர், திருவொற்றியூர் போலீஸ் நிலைய குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணலி புதுநகரைச் சேர்ந்த டேனியல் ஆண்டனி (வயது 36), தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த அருள்செல்வம் (36), மாதவரம் விஜயா நகரைச் சேர்ந்த சசிகுமார் (40), வில்லிவாக்கம் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்த சரவணன் (37) மற்றும் சுரேஷ் ஆகிய 5 ஊழியர்கள் சேர்ந்து எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த தவணைத்தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல் ரூ.7 லட்சத்து 32 ஆயிரத்து 236-ஐ கையாடல் செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 5 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேலை செய்த இடத்திலேயே பணம் மோசடி செய்ததாக டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்