வால்பாறை நடுமலை ஆற்றில் 4-ந்தேதி விநாயகர் சிலைகள் கரைப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
வால்பாறை நடுமலை ஆற்றில் 4-ந்தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வால்பாறை
வால்பாறை நடுமலை ஆற்றில் நாளை விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விநாயகர் சிலைகள் கரைப்பு
வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடுமலை ஆற்றில் கரைக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரக்கூடிய வழித்தடங்கள், நகர் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த நிலையில்விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ள நடுமலை ஆற்று பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆற்றில் சிலை கரைக்கும் இடத்தில் மின் விளக்குகள் அமைப்பது, தடுப்புகள் அமைப்பது, தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் பாதுகாப்பு கயிறுகள் கட்டி பாதுகாப்பு பணியை மேற்கொள்வது, சிலைகளுக்கு அவமரியாதை ஏற்பட்டு விடாமல் தூக்கி வீசுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது, சிலை கரைப்பு நிகழ்ச்சியை காணவரும் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.