இறையூர், வேங்கைவயல் பகுதிகளில் 4 சோதனைச்சாவடிகள் அமைப்பு
வெளியூர் ஆட்கள் வருவதை தடுக்க இறையூர், வேங்கைவயல் பகுதிகளில் 4 சோதனைச்சாவடிகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.;
அசுத்தம் கலந்த விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 மாதங்களை கடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்களிடையே வெளியூர் ஆட்களால் மீண்டும் பிரச்சினை தூண்டப்படுவதாகவும், எனவே வெளியூர் ஆட்கள் யாரும் வேங்கைவயல் பகுதிக்கு வரக்கூடாது என்று ஏற்கனவே இறையூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோதனைச்சாவடிகள் அமைப்பு
கடந்த 22-ந் தேதி இரவு மதுரை மாவட்டத்திலிருந்து கல்லூரி மாணவர்கள் 55 பேர் பஸ்சில் வேங்கைவயல் கிராமத்திற்கு வந்த நிலையில் வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று கூறி இறையூர் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெளியூர் ஆட்கள் வேங்கைவயல் பகுதிக்கு வராமல் கண்காணிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை இறையூர் மக்கள் கைவிட்டனர்.
இந்தநிலையில் இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதிகளில் ஏற்கனவே 5 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது வேங்கைவயல், இறையூர் பகுதிகளுக்கு செல்லும் மக்களை கண்காணிக்கவும், அதேபோல் வெளியூர் ஆட்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில் கொச்சம்பட்டி பிரிவு சாலை, பூங்குடி நுழைவு வாயில், இறையூர் பிரிவு சாலை, இறையூர் பாலம் என மொத்தம் 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 40 போலீசார் வரவழைக்கப்பட்டு சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணை
கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இறையூர், வேங்கைவயல் பகுதிக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தானா? என்று விசாரணை நடத்தி அனுப்பி வருகின்றனர். மேலும் இறையூர், வேங்கைவயல் பகுதிகளில் ஏற்கனவே 5 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 4 சோதனைச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு போலீசார் தீவிர, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த 140-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வோம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.