தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 3,834 மாணவர்கள் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் நடந்த தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 3,834 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

Update: 2023-10-15 17:41 GMT

திறனறிவு தேர்வு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் சிறப்பாக செயல்படும் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்படும். இந்த தேர்விற்கு அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 4,069 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத வேலூர் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் பள்ளி, வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி உள்பட 16 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

3,834 மாணவர்கள் எழுதினர்

தேர்வு காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி மாணவர்கள் காலை 8.30 மணி முதல் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர். மாணவர்கள் சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், டிஜிட்டல் கைக்கெடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை.

வேலூர் மாவட்டத்தில் 3,834 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். 235 மாணவர்கள் பங்கேற்கவில்லை. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா ஆகியோர் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்