துணை வட்டார வளர்ச்சி அதிகாரி வீட்டில் 38 பவுன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை

நெல்லையில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி வீட்டில் 38 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-02 20:55 GMT

துணை வட்டார வளர்ச்சி அதிகாரி

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜாநகர் வேலவர் காலனியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள் (வயது 54). நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய இவர் தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவருடைய மனைவி சோவிதா, பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 30-ந்தேதி தங்களது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று வீடு திரும்பினர்.

நகை, பணம் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோக்களில் இருந்த 38 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் ஆகும்.

இதுகுறித்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முருகப்பெருமாளின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி வைத்த பின்னர் மர்மநபர்கள் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு தப்பி செல்வது தெரியவந்தது. எனவே இந்த சம்பவத்தில் முகமூடி கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.

கொள்ளையர்களை பிடிப்பதற்காக, இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்