வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களிடம் ரூ.34 ஆயிரம் திருட்டு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களிடம் ரூ.34 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களிடம் ரூ.34 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பூஜா (வயது 20), 8 மாத கர்ப்பிணியான இவர் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். பரிசோதனைக்கு பின்னர் மருத்துவமனையில் மாத்திரை வாங்க நின்று கொண்டிருந்த போது அவர் வைத்திருந்த பையில் இருந்த ரூ.14 ஆயிரத்தை நைசாக மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
வேலை செய்யாத கண்காணிப்பு கேமராக்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த அவரது தந்தை முத்து, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்யும் படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
அதற்கு கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்வதில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் அலட்சியமாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதே சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருட்டு
இதே போன்று மேலும் ஒரு பெண்ணின் 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதுள்ளார். எப்போதும் ஆள்நடமாட்டம் மற்றும் போலீசார் இருந்தும் இது போன்ற செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.