திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 34 பேருக்கு அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 34 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-06-18 21:00 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கலை தடுக்க குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதோடு, குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே ஒருசிலர் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் வாங்கி மாட்டு தீவனம் தயாரித்தல், இட்லி மாவு தயாரித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற நபர்கள் 25 கிலோ முதல் 100 கிலோ வரை ரேஷன் அரிசியை கடத்தி செல்வதால் எளிதில் சிக்குவதில்லை. இதனால் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது பெரும் சவாலாக இருந்தது.

இதை முற்றிலும் தடுக்கும் வகையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாறுவேடங்களில் கடந்த 3 மாதங்களாக விசாரணையில் இறங்கினர். அப்போது சிறிய அளவில் ரேஷன்அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் சிக்க தொடங்கினர். அந்த வகையில் 34 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபால் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்த இருப்பதாக போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்