ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 33 பவுன் நகைகள் கொள்ளை
பண்ருட்டி அருகே பட்டப்பகலில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 33பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பண்ருட்டி
ஓய்வுபெற்ற ஆசிரியர்
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள சின்னஒடப்பன்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 61). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் குடும்பத்துடன் வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ வீட்டின் கதவை பூட்டி, அதன் சாவியை வாசல்படியின் மேல் பகுதியில் வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலையில் தனது மனைவி வளர்மதியுடன் பாச்சாரகுப்பத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். முன்னதாக அவர் வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வாசலபடியின் மேல்பகுதியில் வைத்திருந்தார்.
33 பவுன் நகைகள் கொள்ளை
பின்னர் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள 33 பவுன் நகைகளை காணவில்லை.
ஆறுமுகம் வீட்டில் சாவியை வைத்துவிட்டு வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதனை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் முத்தாணடிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்ட நாய், அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடிச் சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து ஆறுமுகத்தின் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலிலேயே மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டியிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.