324 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் சரகத்தில் கடந்த ஆண்டு 324 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி கடத்துதல், விற்பனை செய்பவர்கள் மீதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாது. சேலம் சரகத்தில் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா மற்றும் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் 91 ரவுடிகள் உள்பட 174 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 40 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 47 பேரும், தர்மபுரி மாவட்டத்தில் 25 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 பேரும் என மொத்தம் கடந்த ஆண்டில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 324 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.