மதுரையில் ஆவின் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை, பணம் திருட்டு
மதுரையில் ஆவின் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை, பணம் திருட்டு போனது.
மதுரையில் ஆவின் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை, பணம் திருட்டு போனது.
நகை, பணம் திருட்டு
மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள நியூ எச்.ஐ.சி. காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், ராணுவ வீரர். இவரது மனைவி கல்பனா (வயது 41), மதுரை ஆவினில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவரும், மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் கல்பனா மட்டும் மதுரையில் தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்பனா வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 32 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி மற்றும் 62 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த கல்பனா கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர்.
போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆவின் அதிகாரி வீடு புகுந்து 32 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.