குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 311 மனுக்கள் பெறப்பட்டன

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 311 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-08-14 18:45 GMT

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 311 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 311 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு தலா ரூ.8,500 மதிப்பில் மொத்தம் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

உரிமத்தை புதுப்பிக்க கூடாது

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராமலெட்சுமி கருத்தப்பாண்டி பொதுமக்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில், "அரியூர் மலையில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியினால் வேளாண்மை நிலமும், நீர் நிலையும் பேரழிவை எதிர்நோக்குகிறது. இதன் உரிமம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதால் இதன் உரிமத்தை நீட்டிப்பு செய்யக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

கடையம் அருகே உள்ள கீழ ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த உச்சி மல்லி என்பவரும் கொடுத்த மனுவில் "அரசு ஒப்பந்ததாரர் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியை பணத்தை வாங்கிக் கொண்டு மிகவும் தாமதம் செய்வதாகவும் அதனை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு பணி வழங்கக்கோரிக்கை

அடைக்கலப்பட்டணம் அழகாபுரி பாபநாசபுரத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவர் மனைவி பார்வதி கொடுத்த மனுவில், "தனது கணவர் விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரியான வருமானம் இல்லாததால் தனக்கு அரசு பணி வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்