ரூ.30 ஆயிரம் கோடியில் குடிநீர் திட்ட பணிகள் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகள் நடக்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Update: 2022-10-09 09:35 GMT

சென்னை, தங்கசாலையில் உள்ள அரசு மைய அச்சகம் அருகில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ரூ.1.91 கோடி மதிப்பில், சென்னை ஏழுகிணறு மலையப்பன் தெரு கழிவுநீரகற்று நிலையத்தில் இருந்து புதிய கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். அத்துடன், ரூ.1.94 கோடி மதிப்பில், சென்னை, வ.உ.சி சாலையில், ஜட்காபுரம், வால்டாக்ஸ் ரோட்டில் மேம்படுத்தப்பட்ட கழிவுநீரகற்று நிலையத்தையும், ரூ.50 லட்சம் மதிப்பில் ஏழுகிணறு, கோவிந்தப்பா தெருவில் புதிய அலுவலக கட்டிடங்களையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, 'சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முதல்-அமைச்சர் தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கூட்டுக்குடிநீர் திட்டமானது குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 548 இடங்களில் சுமார் 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் திட்ட பணிகளை மேற்கொள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகள் நடக்க உள்ளன. இதுதவிர பூண்டி, புழல் மற்றும் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை போன்ற நீர்த்தேக்கங்களில் இயற்கையாகவே நீரை தேக்கி அந்த நீரை பொதுமக்களுக்கு வினியோகிக்கவும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

வடசென்னை பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கழிவுநீர் குழாய்களே செயலாக்கத்தில் உள்ளன. பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ளன. இந்த பகுதியில் புதிய கழிவுநீர் உந்து நிலையம், குடிநீர் வாரிய பகுதி அலுவலகம் மற்றும் புதிய கழிவுநீர் குழாய் பதிப்பு பணிகளும் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், செயல் இயக்குநர் ராஜகோபால் சுன்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்