மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
தளி
உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் செல்வநாராயணன். கபூர்கான் வீதியில் உழவர் சந்தைக்கு அருகே மளிகை கடை வைத்து உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது மளிகைப் பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் திருட்டு போனதும் தெரிய வந்தது. இது குறித்து உடுமலை போலீசில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
இதே போன்று நகராட்சி பூங்காவிற்கு எதிராக வணிக வளாகத்தில் உள்ள மூன்று கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இந்த திருட்டு சம்பவமானது கடை உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
----------------