சரக்கு வேன் கவிழ்ந்து 30 பேர் காயம்

சிங்காரப்பேட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சரக்கு வேன் கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-07-06 14:54 GMT

ஊத்தங்கரை

சரக்கு வேன் கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்த 40 பேர் வெள்ளக்குட்டை கிராமத்தில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சரக்கு வேன் மூலம் சென்றனர். இந்த வேனை மல்லிப்பட்டியை சேர்ந்த டிரைவர் மணி ஓட்டி வந்தார். சிங்காரப்பேட்டை தீர்த்தகிரி வலசை அருகே உள்ள மாரக்கான் ஏரி அருகே வேன் சென்று கொண்டு இருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சாமிநாதன் (வயது 63) என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சரக்கு வேன் கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்