ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பயணிகள் காயம்

ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.

Update: 2023-10-07 17:42 GMT

நாகர்கோவிலில் இருந்து ஒரு ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா, ஒதியத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 42) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரை தாண்டி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் சாலையின் இடதுபுறம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரத்தில் தூங்கியவாறு பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகளும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டதில் லேசான காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும், ரோந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பஸ்சின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளை உடைத்து உள்ளே லேசான காயத்துடன் சிக்கியிருந்த 30 பயணிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு 108 ஆம்புலன்சின் மருத்துவ உதவியாளரை கொண்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அந்த வழியாக சென்ற பஸ்களில் ஏறிச் சென்றனர். இதையடுத்து போலீசார் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து ஆம்னி பஸ்சை வெளியே மீட்டனர். பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்