பெண்ணை தாக்கிய வழக்கில்வாலிபருக்கு 3 ஆண்டு சிறை :விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் தீர்ப்பு

பெண்ணை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-29 18:45 GMT


திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி விஜயா (வயது 30). இவர் கடந்த 22.6.2021 அன்று தனது தம்பி சக்திகார்த்திகேயனுடன் (20) ஒரு மோட்டார் சைக்கிளில் திருவெண்ணெய்நல்லூர் பஜாரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது தடுத்தாட்கொண்டூர் வடக்கு தெருவை சேர்ந்த யாசகம் மகன் மின்னல்ராஜா (26) என்பவர், விஜயாவை பின்பக்கமாக கையால் தட்டி மானபங்கப்படுத்தினார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விஜயா, இதுபற்றி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விஜயாவை மின்னல்ராஜா, சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜயா, திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்னல்ராஜாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட மின்னல் ராஜாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் கோதண்டபாணி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்