2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் கருணா (வயது 40). இவர் டவுன் சேரன்மாதேவி ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், டவுன் பகுதியை சேர்ந்த சித்திரை பாண்டியன் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு சித்திரை பாண்டியன், அருள், மாரியப்பன், மற்றொரு மாரியப்பன், கணேசன், நயினார், முருகன் ஆகியோர் சேர்ந்து கருணாவை தாக்கி மிரட்டல் விடுத்தது உள்ளனர்.
இதுகுறித்து டவுன் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை 2-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சித்திரை பாண்டியன் மற்றும் கணேசன் ஆகியோர் இறந்துவிட்டனர். இதையடுத்து மற்ற 5 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி பத்மநாபன் வழக்கை விசாரித்து அருள் (35), மாரியப்பன் (35) ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கந்தசாமி ஆஜர் ஆனார்.