3 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்
கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய 3 ஆயிரம் கிலோ குட்கா பண்டல்களை கேரளா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கூடலூர்,
கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய 3 ஆயிரம் கிலோ குட்கா பண்டல்களை கேரளா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக தினமும் சரக்கு லாரிகளில் கேரள மாநிலத்திற்கு அத்தியாவசிய மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதில் சில வாகன டிரைவர்கள் காய்கறி மற்றும் உணவுப் பொருள்களுக்கு இடையே மறைத்து வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட பொருட்களை கடத்தி செல்கின்றனர்.
இதனால் மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கேரள எல்லையில் உள்ள வழிகடவு சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிஜுமோன், பிரமோத் உள்ளிட்ட போலீசார் நள்ளிரவு திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தினர்.
குட்கா பறிமுதல்
லாரி டிரைவரிடம் விசாரித்த போது உரிய பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் இருந்த சரக்கு பொருட்களை திறந்து பார்த்தனர். அப்போது பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே குட்கா பண்டல்கள் மறைத்து வைத்து கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.
பின்னர் லாரியில் இருந்து 3 ஆயிரம் கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என போலீசார் கூறினர். இதுதொடர்பாக பாலக்காட்டை சேர்ந்த டிரைவர் சபிக் (வயது 35), கிளீனர் அப்துல் ரகுமான் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழிக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.