இலங்கைக்கு 2 டன் பீடி மூட்டைகளை படகில் கடத்த முயன்ற தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

இலங்கையை சேர்ந்தவர்கள் படகில் வந்து பீடி மூட்டைகளை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

Update: 2024-02-21 11:27 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா, கடல் அட்டை மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதனால் கடத்தல்காரர்கள் இடத்தை மாற்றத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கூத்தங்குளியில் இருந்து ஒரு நாட்டுப்படகில் தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமிகாலனியை சேர்ந்த டிஜோ(வயது 24), இனிகோநகரை சேர்ந்த மரிய அந்தோணி நரேஷ்(21) மற்றும் 18 வயது வாலிபர்கள் 3 பேர் பீடி இலை மூட்டைகளை இலங்கைக்கு கடத்தி சென்று உள்ளனர்.

இவர்கள் அந்த படகில் சுமார் 2 டன் பீடி இலைகளை கடத்தி சென்று உள்ளனர். இலங்கை எல்லைப்பகுதியில் வைத்து, இலங்கையை சேர்ந்தவர்கள் படகில் வந்து அதனை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் 5 பேரும் கன்னியாகுமரி அருகே இலங்கை கடல் எல்லை பகுதியில் காத்து இருந்தார்களாம்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக நின்ற படகை மடக்கி பிடித்தனர். படகில் பீடி இலை மூட்டைகள் இருப்பதை பார்த்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து பீடி இலை பண்டல்கள், படகு ஆகியவற்றை இலங்கை கல்பிட்டியில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் பிடிபட்ட மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாவும், அதனை செலுத்தினால் மீனவர்களை இலங்கை அரசு விடுவிப்பதாகவும் கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்