நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
வெள்ளநீர் கால்வாயில் குளித்தபோது 3 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
நெல்லை,
நண்பனின் புதுமனை புகுவிழாவிற்கு சென்ற நிலையில், வெள்ள நீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரது மகன் அருண்குமார் (17), டக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவரது மகன் நிகில் (17), கொங்கந்தான் பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் ஆண்ட்ரூஸ் (17) ஆகிய மூன்று பேரும் ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இவர்கள் மூன்று பேரும், இவர்களது நண்பரது புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகூர்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்றுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மாணவர்கள் ஆறு பேரும் இணைந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வெள்ள நீர் கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
வெள்ள நீர் கால்வாயில் மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிகில் ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் அவர்களைக் காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர். தொடர்ந்து, இது குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை, சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் மற்றும் முன்னீர்பள்ளம் போலீசார், தண்ணீரில் மூழ்கிய ஆண்ட்ரூஸ் மற்றும் அருண்குமார் ஆகிய இரண்டு பேரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு நிக்கிலை சடலமாக மீட்டுள்ளனர்.
இதனையடுத்து, இறந்த 3 மாணவர்களின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.