உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மீது மோதியதில் தீப்பிடித்த கார்-3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-12-25 19:47 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கார் தீப்பிடித்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து அரசு பஸ் ஒன்று மதுரை நோக்கி சென்றது. இந்த பஸ் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையிலிருந்து வந்த கார் ஒன்று எதிரே வந்த ஷேர் ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த அரசு பஸ்சின் மீதும் வேகமாக மோதியது.

இதில் கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்தபடி இறங்கி தப்பினர். சிறிதுநேரத்தில் கார் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் கருகி சேதமாகியது.

5 பேர் காயம்

இந்த விபத்தில் காரில் பயணித்த கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கீது(வயது 33), அவருடைய குழந்தைகள் நீத்தா(8), நிதிஸ் (6) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பூதிப்புரம் கிராமத்தை சேர்ந்த முருகன்(40), பால்பாண்டி (38) ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்