வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்
நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்.
தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாறைக்குளம் விலக்கு அருகே நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம், மேலூரை சேர்ந்த சுந்தர் (வயது 19) என்பவரும், அவருடைய 3 நண்பர்களும் சேர்ந்து வேறு ஒரு நண்பரை பார்க்க செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர் சேர்ந்து மிரட்டி அவர்களிடம் இருந்து 4 செல்போன்களை மற்றும் 3½ பவுன் தங்க சங்கிலி போன்றவற்றை பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து சுந்தர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் தூத்துக்குடி மாவட்டம் எஸ்.எப்.பிள்ளை மார்க்கெட் அருகே வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த எட்வின் ஆகாஷ் (19), மட்டக்கடை வடக்கு பிள்ளையார் தெருவை சேர்ந்த சகாய பெவின் அஜன் (21), ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த மாரிசங்கர் (19) ஆகிய மூவரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 3½ பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது.