அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கிய மேலாளர் உள்பட 3 பேர் கைது

மாதலாம்பாடி கிராமத்தில் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கிய மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-10 00:15 IST

மாதலாம்பாடி கிராமத்தில் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கிய மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி

திருவண்ணாமலையை அடுத்த மாதலாம்பாடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் 2 சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மங்கலம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 2 சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரியை மங்கலம் போலீசார் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

பின்னர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கிலோ எடை உள்ள 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பாலீஷ் போட்டு பெங்களூருவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

மேலும் கோதுமையையும் கடத்தி வந்து மாவாக அரைத்து கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலை மேலாளர் சங்கர் (வயது 42) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த பரசுராம் (41), அழகுபாண்டி (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்