ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-02-09 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய்-மகள்

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேர்மன். ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான இவரது மனைவி ஞானபாக்கியம் (வயது 65). இவர்களுக்கு ஹரிஹரபுத்திரன் என்ற மகனும், பாக்கியகோமதி (30) என்ற மகளும் உள்ளனர். இவரை திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு முத்து செல்வகோமு (7) என்ற மகன் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேர்மன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயங்கி கிடந்தனர்

பாக்கியகோமதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மகனுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சாப்பிட்டுவிட்டு ஒரே அறையில் ஞானபாக்கியம், பாக்கியகோமதி, சிறுவன் முத்துசெல்வகோமு ஆகியோர் தூங்க சென்றனர்.

நேற்று காலையில் அந்த அறைக்கு ஹரிஹரபுத்திரனின் மனைவி சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து உடனடியாக செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷம் குடித்தனர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், ஞானபாக்கியம், பாக்கியகோமதி ஆகியோர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் தூக்கும்போது அவர்கள் வலியால் துடித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த எறும்பு பொடி (விஷம்), நோய்க்கு பயன்படுத்திய மாத்திரைகளை தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். மேலும் அந்த தண்ணீரை சிறுவன் முத்துசெல்வகோமுவும் குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 பேரும் மயங்கியுள்ளனர்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பரபரப்பு

எனினும் தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்