பள்ளி காவலாளி கொலை வழக்கில் பேரன் உள்பட 3 பேர் கைது
பள்ளிபாளையத்தில் நடந்த பள்ளி காவலாளி கொலை வழக்கில் பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பள்ளிபாளையம்
அரசு பள்ளி காவலாளி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இரவு காவலாளியாக நடராஜ் (வயது 80) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ந் தேதி காலை அவர் பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
நடராஜின் உடலை ஆய்வு செய்ததில், அவருடைய கழுத்தில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனிடையே அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் சிலர் அங்கு நடமாடியது தெரியவந்தது.
பரபரப்பு வாக்குமூலம்
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சேகர் மற்றும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையில், நடராஜை அதே பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவா்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கைதான 3 வாலிபர்கள் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
இறந்த நடராஜின் தங்கையின் பேரன் பிரபு ராம் (19). இவர் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்களான மணிகண்டன் (21), மாணிக்கம் (20). நண்பர்களான அவர்கள் 3 பேரும் இரவு நேரத்தில் அந்த பள்ளிக்குச் சென்று மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை அறிந்த பிரபு ராமின் தாத்தா நடராஜ், அவரை கண்டித்துள்ளார். மேலும் அவரது வீட்டிலும் கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த பிரபு ராம் தனது நண்பர்கள் மணிகண்டன், மாணிக்கம் ஆகியோருடன் சேர்ந்து சம்பவத்தன்று அதிகாலை 2 மணிக்கு பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் வாங்கிச் சென்ற மதுவை குடித்துவிட்டு நட்ராஜை கழுத்தை நெரித்தினர். மேலும் கல்லால் அவரது நெஞ்சில் தாக்கியும், தலையணையால் நடராஜ் முகத்தில் வைத்து அழுத்தியும் கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து ஒன்றும் தெரியாததுபோல், காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 பேர் கைது
பின்னர் கைதான 3 பேரையும் போலீசார் குமாரபாளையம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி காவலாளி கொலை வழக்கில் பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.