3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட தகராறில், நடந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கோவை
கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட தகராறில், நடந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிரிக்கெட் போட்டியில் தகராறு
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது24).
இவர் கடந்த 12.4.2016 அன்று அந்த பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் விளையாடினார்.
அப்போது போட்டியில் பங்கேற்ற ஆவாரம்பாளையம் ராமசாமி லே-அவுட்டை சேர்ந்த அருண் (24) என்ற வாலிபருக்கும் சதீஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் ஒருவரை ஒருவர் தவறான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். பின்னர் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கத்தியால் குத்திக்கொலை
இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அருண், தனது நண்பர்கள் அரவிந்த் என்ற குரங்குசாமி (23), விஜயகுமார் என்ற விஜி (24) ஆகியோரை அழைத்துக்கொண்டு சதீஷ்குமாரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சதீஷ்குமாரை கத்தியால் குத்தினர். இதைத் தொடர்ந்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
ஆயுள் தண்டனை
இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 22.4.2016 அன்று இறந்து போனார்.
இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட அருண், அரவிந்த், விஜயகுமார் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதைத்தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.