கொட்டித்தீர்த்த மழையால் 3 வீடுகள் சேதம்
கனமழைக்கு திண்டுக்கல், பழனியில் 3 வீடுகள் சேதம் அடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மழை காரணமாக பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 54) என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் பழனி அருகே உள்ள ஆயக்குடியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (48) என்பவரின் வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. இந்த இரு சம்பவங்கள் நடந்தபோதும் அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சேதமான பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி, ஆயக்குடி, கோதைமங்கலம் ஆகிய பகுதியில் 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
இதேபோல் திண்டுக்கல்லில் பெய்த தொடர் மழையால், அனுமந்தநகர் அருகே ராஜீவ்காந்தி நகரில் சந்தியாகாம்மாள் (69) என்பவரின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலகிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி அரவிந்த், சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.