தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதியதில் நண்பர்கள் 3 பேர் பலி-2 பேர் படுகாயம்

Update: 2022-10-09 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நண்பர்கள்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அரிசந்திரன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் கவியரசு (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினரின் காரில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் கார்த்திக் (24), ராகுல் (22), ஜீவபாரதி (22), சந்தோஷ் (15) ஆகியோருடன் தர்மபுரி 4 ரோடு அருகே டீ குடிக்க சென்றுள்ளார்.

பின்னர் அவர்கள் தர்மபுரி குண்டல்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை கவியரசு ஓட்டி சென்றுள்ளார். மாட்டுகானூர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, முன்னால் சேலம் நோக்கி சென்ற லாரியை கவியரசு முந்த முயன்றுள்ளார்.

3 பேர் பலி

அப்போது, கவியரசின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென லாரியின் பின் பக்கத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி சந்தோஷ், ராகுல், ஜீவபாரதி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் கவியரசு, கார்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கவியரசு மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி பலியான சந்தோஷ், ராகுல், ஜீவபாரதி ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான ராகுல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஜீவபாரதி தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியிலும், சந்தோஷ் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஒரே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் தர்மபுரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்