குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் பலி

சித்தூர் மாவட்டம் பைரெட்டிபல்லி அருகே நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்ற பேரணாம்பட்டு மாணவிகள் உள்பட 3 பேர் குளத்தில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2023-03-29 18:56 GMT

கோவிலுக்கு சென்றனர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் பவ்யா (வயது 18), பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சுப்பிரமணியின் உறவினர் வெங்கட்ராமன். இவரது மகள் மோனிகா (15), அரவட்லா அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

உறவினர்களான இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடந்த 28-ந் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பைரெட்டிபல்லி மண்டலம் அருகே உள்ள கோட்ரபல்லி கிராமத்தில் மலைப்பகுதியில் உள்ள அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தும் விழாவில் கலந்து கொண்டனர்.

குளத்தில் மூழ்கி பலி

அப்போது பவ்யா, மோனிகா மற்றும் ஆந்திர மாநிலம் கோட்ரபல்லி கிராமத்தை சேர்ந்த உறவினர் கதிரப்பன் என்பவரது மகள் 9-ம் வகுப்பு படிக்கும் கவுதமி (14) ஆகிய 3 பேரும் திருவிழா நடந்த மலைப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு மதியம் சுமார் 1 மணியளவில் அங்குள்ள குளத்தில் குளித்துள்ளனர். அப்போது அவர்கள் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தங்களை காப்பாற்றும் படி கூச்சலிட்டனர். அங்கு வேடிக்கை பார்க்க சென்ற ஒரு சிறுவன் இதனை பார்த்து திருவிழா நடந்த இடத்திற்கு சென்று தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கிராம மக்கள் விரைந்து சென்று 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 பேரும் குளத்தின் ஆழமான பகுதியில் சகதியில் சிக்கி மூச்சு திணறி இறந்து விட்டனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் பலமநேர் போலீசார் சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவிழாவுக்கு சென்ற மாணவிகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்