கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி...கரூரில் சோகம்

உயிரிழந்த 3 சிறுவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2024-05-14 07:27 GMT

கரூர்,

கரூர் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் அஸ்வின் (வயது 12) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் ஸ்ரீவிஷ்ணு (வயது 14) மற்றும் ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் மாரி முத்து (வயது 13).

நண்பர்களான 3 சிறுவர்களும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் நேற்று காலை வீட்டை விட்டு விளையாட சென்றுள்ளனர். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் சிறுவர்களை தேட தொடங்கினர்.

பல்வேறு இடங்களில் தேடி அலைந்த போது இரவு 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் 3 பேரின் செருப்பு கிணற்றின் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீருக்கு அடியில் கிடந்த 3 சிறுவர்களின் உடல்களையும் இரவு 12 மணியளவில் மீட்டனர். பின்னர் 3 சிறுவர்களின் உடல்களையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்