குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

சூலூரில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.

Update: 2022-10-14 18:45 GMT

கருமத்தம்பட்டி

சூலூரில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.

பள்ளி மாணவர்கள்

கோவை அருகே சூலூரில் உள்ள மதியழகன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் ஜஷ்வந்த் (வயது 8), அன்பு என்பவருடைய மகன் அகிலன் (10), கணேஷ் என்பவருடைய மகன் சஞ்சீவ் (7) ஆகியோர், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவர்கள் 3 பேரும், நேற்று மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, சூலூர் சின்னகுளம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள குளத்துக்குள் இறங்கி குளித்தனர். ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாது.

உடல்கள் மீட்பு

இதற்கிடையில் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால், 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினார்கள். அப்போது ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து விளையாட சென்ற குழந்தைகளை காணவில்லையே என்று பெற்றோர் தேடி அலைந்தனர். அப்போது, குளத்தில் மூழ்கி 3 பேரும் இறந்து இருப்பதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சூலூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து, 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரிதாப சம்பவம், சூலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்