நோயாளிகள் மழையில் இருந்து தப்பிக்க ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 3 பேட்டரி கார்கள் இயக்கம்
சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பல இடங்களில் வடகிழக்கு பருவமழையையொட்டி பொதுமக்களுக்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஆஸ்பத்திரியின் 'டீன்' டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-
ஓமந்தூரார் ஆஸ்பத்திரி வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புறநோயாளிகள் பிரிவுக்கு, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை அழைத்துவர 3 பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நோயாளிகள் மழையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளலாம். அதேபோல் புறநோயாளிகள் பிரிவு பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.
கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீர் தேங்க கூடிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு, நீர் வடிவதற்குண்டான மோட்டார்கள் பொருத்த தயார் நிலையில் உள்ளது. தேவையான அளவு, மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் மற்றும் களிம்புகள் கையிருப்பில் உள்ளன. பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தரை தளத்திலேயே தயாராக வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையான டீசல் ஜெனரேட்டர்கள், குடிநீர் வசதிகள் போன்றவை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைக்கால முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.