தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

குளித்தலை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-27 17:56 GMT

கொலை மிரட்டல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜோதிமணி தனது ஊரை சேர்ந்த கவுதம், கிஷோர், பப்பு ஆகியோருடன் சேர்ந்து தண்ணீர்பள்ளி கல்லுப்பாலம் பகுதியில் உள்ள துரித உணவு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), விஜய் (25), லோகேஸ்வரன் (22), திருச்சி மாவட்டம் சுப்புராயன்பட்டியை சேர்ந்த சிவா ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜோதிமணியை சாதிப்பெயர் சொல்லி திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அன்று இரவு ஜோதிமணி வீட்டுக்கு சென்ற அந்த 4 பேரும் வீட்டில் இருந்த ஜோதி மணியின் தந்தை வேலுவை தாக்கி அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

3 பேர் கைது

இதில் காயம் அடைந்த ஜோதிமணி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகராறு தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மணிகண்டன், விஜய், லோகேஸ்வரன், சிவா ஆகிய 4 பேர் மீது குளித்தலை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், விஜய், லோகேஸ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

விஜய், லோகேஸ்வரன் ஆகிய 2 பேரும் பல்லடம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மீது ஏற்கனவே குளித்தலை போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்