ரூ.10 லட்சம் கேட்டு பைனான்சியர் கடத்தல் - 3 பேர் கைது

அஞ்செட்டி அருகே ரூ.10 லட்சம் கேட்டு பைனான்சியர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-05-29 01:25 GMT


கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி மராட்டி தெருவை சேர்ந்தவர் வெங்கோபராவ் (வயது 44). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த 9-ந் தேதி வெங்கோபராவ்வை சிலர் சந்தித்து தங்களிடம் நிலம் இருப்பதாக கூறி, அதை விற்க உள்ளதாகவும் கூறினார்கள்.

அந்த நிலத்தை வாங்க விரும்பிய வெங்கோபராவ் அவர்களுடன் சேர்ந்து காரில் சென்றுள்ளார். அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் இருந்தவர்கள் வெங்கோபராவ்வை கத்தி முனையில் மிரட்டி பெங்களூருவில் உள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றார்கள்.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

ரூ.10 லட்சம் பணம் தந்தால் உயிருடன் விட்டு விடுவோம். இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டினார்கள். இதையடுத்து வெங்கோபராவ் ரூ.10 லட்சம் தொகையை தயார் செய்து அந்த கும்பலிடம் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் வெங்கோபராவ்வை அஞ்செட்டியில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.

இந்த நிலையில் உயிர் பயம் காரணமாக கடந்த சில நாட்களாக போலீசில் புகார் அளிக்கால் இரந்த வெங்கோபராவ், நேற்று முன்தினம் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வெங்கோபராவ்வை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்தது ஓசூர் அருகே உள்ள மிலிபிக்கல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (35), பெங்களூரு ஏரிகோடி சக்திவேல் (30), பாண்டுரங்கன்தொட்டியை சேர்ந்த சக்தி (28) மற்றும் சிலர் என தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து கணேசன், சக்திவேல், சக்தி ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்