ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 'பர்ஸ்' திருடிய சகோதரிகள் 3 பேர் கைது
பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பர்ஸ் திருடிய சகோதரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பர்ஸ் திருடிய சகோதரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழா
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்த நிலையில் பட்டுக்கோட்டை நகர பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக மிகுந்த கூட்ட நெரிசலாக இருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா முகமது (வயது30) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை வெளியூர் அனுப்புவதற்காக பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பர்ஸ் திருட்டு
தன்னுடைய இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்தி விட்டு மனைவி மற்றும் குழந்தையை பஸ்சில் ஏற்றிவிட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்காக நடந்து வந்தார். அப்போது அங்கு இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில பெண்கள் நெருக்கியடித்து வந்து அவருடைய பர்சை திருடினர். இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 3 பெண்களை பிடித்த ராஜா முகமது, அந்த பெண்களை பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அங்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த முருகன் மனைவி லட்சுமி என்ற திவ்யலட்சுமி (40), அதே பகுதியை சேர்ந்த பிரபுதேவா மனைவி வெண்ணிலா (34), மற்றும் கார்த்திகா (32) ஆகியோர் என்பதும், இவர்கள் சகோதரிகள் என்பதும் தெரியவந்தது.
கைது
மேலும் ஒவ்வொரு ஊராக சென்று நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடுவதை தொழிலாக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சகோதரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.