காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க 2-வது சுரங்கப்பாதை
மதுக்கரை அருகே தண்டவாளத்தை காட்டு யானைகள் கடக்க 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜனவரி மாதத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.;
தண்டவாளம்
கோவை அருகே உள்ள மதுக்கரையில் இருந்து வாளையாறு வழியாக கேரள மாநிலத்துக்கு தண்டவாளம் செல்கிறது. இதில் மதுக்கரை அருகே ஏ டிராக் மற்றும் பி டிராக் என்று 2 பாதை உள்ளது. இதில் ஏ டிராக் அடர்ந்த வனப்பகுதி வழியாக 2½ கி.மீ. தூரம் தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தை அடிக்கடி காட்டு யானைகள் கடப்பதால் ரெயில் மோதி உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதைத்தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தண்டவாளத்தை காட்டு யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
சுரங்கப்பாதை
இந்த பாதையை காட்டு யானைகள் பயன்படுத்துவதால் எளிதாக தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றன. இதனால் அந்தப்பகுதியில் தண்டவாளத்தில் காட்டு யானைகள் நிற்பது இல்லை. இந்த சுரங்க பாதை திட்டம் நல்ல முயற்சியை கொடுத்து உள்ளது.
எனவே தற்போது அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் இருந்து 1½ கி.மீ. தூரத்தில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. ரெயில்வே மற்றும் வனத்துறை சார்பில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
காட்டு யானைகள் ரெயிலில் அடிபடுவதை தடுக்க மதுக்கரை அருகே ரூ.7½ கோடியில் 20 அடி உயரம், 70 அடி அகலம் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இது நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எனவே தற்போது அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் இருந்து 1½ கி.மீ. தூரத்தில் மற்றொரு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை எப்போது தொடங்க வேண்டும் என்பது குறித்து ரெயில்வே மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எனவே வருகிற ஜனவரி மாதம் இந்த பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர உயரம் குறைவாக இருக்கும் பகுதியில் தண்டவாளத்தின் அருகே கம்பிகளை வைத்து தடுப்பு அமைக்கவும் முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.