கலை கல்லூரிகளில் 27-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடக்கம்

மாணவர் சேர்க்கை 27-ந்தேதி தொடங்கும் நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும்? என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-06-17 18:36 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சுயநிதியின் கீழ் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை, முதுகலை மாணவர் சேர்க்கை வருகிற 27-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு அதிகபட்ச வயது 21 ஆகும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பி.சி.எம்., டி.என்.சி. போன்ற பிரிவினர்களுக்கும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர மற்ற அனைத்து பிரிவினருக்கும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்தப்பட வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

இதுவே, முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.60 செலுத்தப்பட வேண்டும். இந்த கட்டணத்தில் இருந்து எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. முதுநிலை படிப்புகளில் சேர்பவர்கள், பிளஸ்-2 வகுப்பு முடித்து 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்து இருக்க வேண்டும்.

இந்தநிலையில், மாணவர் சேர்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும்? என்பது தொடர்பாக, உயர் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெளிப்படைத்தன்மை

* கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்.

* கட்டணம் எவ்வளவு? என்பதை கல்லூரியின் தகவல் குறிப்பில் வெளியிட வேண்டும்.

* வெளிப்படைத்தன்மையுடன் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

* ஒவ்வொரு படிப்பிலும் இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

* இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சேர்க்கை முழுவதும் 'மெரிட்' அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து சேர்க்கை வழங்கிட வேண்டும்.

இஸ்லாமிய பெண்கள்

* ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு பின்னர் இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில் 30 சதவீதத்துக்கு மேல் பெண்களை சேர்க்கக் கூடாது.

* இஸ்லாமிய பெண்களுக்கு எந்த கல்லூரியிலும் இடம் மறுக்கப்பட கூடாது.

* இது தொடர்பாக ஏதேனும் விதிமீறலுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் சேர்க்கைக் குழு பொறுப்பேற்க வேண்டும்.

* இடஒதுக்கீடு விதிகளை அமல்படுத்துவது ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

* ஒவ்வொரு சுயநிதி படிப்புகளுக்கான சேர்க்கைக்கு முன் உதவிபெறும் படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

தொடர்பு எண் அவசியம்

* கல்லூரிகள் மற்றும் படிப்புகளின் தேர்வுகள், பதிவு செய்யும் நேரத்தில் விண்ணப்பதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குறைந்தது ஒரு தொடர்பு எண்ணாவது இருக்க வேண்டும்.

* விண்ணப்ப பதிவு இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்