ரூ.12 கோடி மதிப்பில் 2,764 பேருக்கு நலத்திட்ட உதவி
திருச்சி மாவட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் 2,764 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்;
திருச்சி, ஜூன்.7-
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.12 கோடி மதிப்பில் 2,764 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் திருச்சி மேற்கு தொகுதியில் 225 பேருக்கும், முசிறி தொகுதியில் 500 பேருக்கும், துறையூர் தொகுதியில் 1,228 பேருக்கும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 140 பேருக்கும், லால்குடி தொகுதியில் 671 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதுதவிர தா.பேட்டை, காட்டுப்புத்தூர், தொட்டியம் பேரூராட்சிகிளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சி சார்பில் அண்ணாமலைநகரில் 1,000 மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர், சாலையோர வியாபாரிகள் 11 பேருக்கு ரூ.10 ஆயிரம் வங்கி கடனுதவி ஆணை வழங்கினார்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கும் அதன் செயல் இயக்குனர் எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக கட்டிட பொறியியல் துறை பேராசியரியர் ரமேஷ் ஆகியோருக்கு தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையை அமைச்சர் வழங்கி பாராட்டினார். அத்துடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பையை மக்களிடம் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன், மாவட்ட வன அதிகாரி கிரண், மேயர் மு.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.