தமிழகத்தில் 1,558 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது கள்ளக்குறிச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் 1,558 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கள்ளக்குறிச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-03-11 18:45 GMT

கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 500 முதல் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு ஒவ்வொன்றாக திறந்து வைக்கப்பட்டு வருகிறது. தற்போது 4-வது மருத்துவமனையாக கள்ளக்குறிச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் 708 மருத்துவமனைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனையில் பணிகள் முடிவுற்ற நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரிய 500 மருத்துவர்கள், 500 சுகாதார ஆய்வாளர்கள், 500 மருந்தாளுனர், 500 செவிலியர்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

ரத்த பரிசோதனை

தற்போது இந்தியா முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1,558 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 347 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 663 பேருக்கு காய்ச்சல் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் எடுத்த ரத்த பரிசோதனை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவை பொறுத்து அவர்களுக்கு வைரஸ் காய்ச்சலா என்பது தெரியவரும். அவ்வாறு வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் கூட, 3 அல்லது 4 நாட்கள் தொண்டை வலி, உடல் வலி இருக்கும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்