மதுரை மாவட்டத்தில் 26.35 லட்சம் வாக்காளர்கள்

மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 26 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2022-11-09 20:33 GMT

மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 26 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

விண்ணப்பம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2023-ம் நாளினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் கலெக்டர் அனிஷ்சேகர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பெற்று கொண்டார்.

பின்னர் கலெக்டர் அனிஷ்சேகர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 26 லட்சத்து 35 ஆயிரத்து 238 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 12 லட்சத்து 96 ஆயிரத்து 75 பேர். பெண்கள் 13 லட்சத்து 38 ஆயிரத்து 950. மூன்றாம் பாலினத்தவர்கள் 213 ஆகும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள், அதற்கு முன்பே 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தகுதி பெற்றவர்கள். மேலும் ஜனவரி மாதம் 1-ந்தேதி 2023-ம் ஆண்டு, ஜூன் மாதம் 1-ந் தேதி 2023-ம் ஆண்டு மற்றும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி 2023-ம் ஆண்டு ஆகிய காலாண்டுகளில் 18 வயது பூர்த்தியடையும் தகுதியான வாக்காளர்களும், முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம். அவர்களது விண்ணப்பம் 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் இறுதி செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

சிறப்பு முகாம்

அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் மற்றும் திருத்தம் செய்யும் பணி நடைபெறும். மேலும் விண்ணப்பங்களை www.nvsp.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். கைப்பேசியில் வாக்காளர் உதவி எண் என்ற செயலி (Voters Helpline Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் வருகிற 12-ந்தேதி, 13, 26, 27 ஆகிய 4 நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும். மேலும் இந்த முகாம்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பு செய்திட படிவம் 6பி பூர்த்தி செய்து கொடுத்து பயன்பெறலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

மேலும் 1950 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பப் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு பேரணி

அதனைத்தொடர்ந்து கலெக்டர் அனிஷ்சேகர், தமுக்கம் மைதானத்தில் வாக்காளர் சுருக்கத்திருத்தம் 2023 தொடர்பாக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகி பிரேமலா (மதுரை), பிரிதோஷ் பாத்திமா (மேலூர், அனிதா (திருமங்கலம்), நடராஜன் (உசிலம்பட்டி) உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்