சிவகங்கையில் 23-ந் தேதி கடையடைப்பு, ரெயில் மறியல் அனைத்து கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு

சிவகங்கையில் 23-ந் தேதி கடையடைப்பு, ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது என அனைத்துகட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-14 19:15 GMT


சிவகங்கையில் 23-ந் தேதி கடையடைப்பு, ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது என அனைத்துகட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கை

சிவகங்கை வழியாக செல்லும் ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன. சிவகங்கை மாவட்ட தலைநகராக இருப்பதால் இங்கிருந்து பல்வேறு காரணங்களுக்காக சென்னை போன்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் ரெயிலில் போதிய டிக்கெட் கிடைக்காமலும் இந்த வழியாக செல்லும் ரெயில்கள் நிற்காததால் மானாமதுரை அல்லது காரைக்குடி சென்று ரெயிலில் ஏற வேண்டிய நிலை உள்ளது.

மேலும் காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் ரெயிலை மானாமதுரையில் இருந்து நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக மத்திய அரசுக்கும் ரெயில்வே துறைக்கும் அனுப்பி வருகின்றனர். ஆனால் ரெயில்கள் நிற்காமல் செல்வதால் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டம் சிவகங்கை தி.மு.க. நகர செயலாளரும் நகரசபை தலைவருமான துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

தீர்மானம்

கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், வட்டார காங்கிரஸ் தலைவர் மதியழகன், நகர சபை துணைத்தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப் கான், துபாய் காந்தி, சரவணன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் புகழேந்தி, ஆம்ஆத்மி கட்சி மாவட்ட செயலாளர் பெரியார் ராமு, இந்தியா கம்யூனிஸ்டு நகர் செயலாளர் மருது, ம.தி.மு.க. நகர் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் உலகநாதன், வர்த்தக சங்க மாவட்ட துணை தலைவர் தனசேகரன், இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் சேக் முகமது, தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் ராம்குமார், ஓட்டல் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் முருகன் தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரோஸ் காந்தி மற்றும் நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

ரெயில் மறியல்

சிவகங்கை ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் 11 ரெயில்களை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று(வெள்ளிக்கிழமை) மதுரை ரெயில்வே கோட்ட மேலாளரிடம் மனு கொடுப்பது என்றும் வருகிற 23-ந் தேதி சிவகங்கை நகரில் முழு கடையடைப்பு நடத்தி சிவகங்கையில் இருந்து கண்டணி வரை தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்களுடன் சென்று டெல்லியில் ரெயில்வே வாரிய தலைவர் மற்றும் ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்