பருவமழை முன்னெச்சரிக்கையாக 233 முகாம்கள் தயார் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்

கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 233 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-04 18:45 GMT


மழைநீர் வெளியேற்றும் பணி

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அந்த வகையில் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணான்குட்டை, அங்காளம்மன் கோவில் தெரு, பாஷியம்ரெட்டி தெரு, வி.பி.ஆர். நகர், அண்ணா நகர், கார்த்திகேயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியது.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு கடலூரில் நேற்று வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் வண்ணான்குட்டை, வி.பி.ஆர். நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை, மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும், மழைவெள்ள மீட்பு பணியில் ஈடுபட அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

278 இடங்கள் பாதிப்பு

மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 27 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக உள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீர் 7 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 5 மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உடனுக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள் 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, துணை கலெக்டர்கள் நிலையில் உள்ள 21 அலுவலர்கள் மூலம் மழைவெள்ள பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

750 டன் அரிசி இருப்பு

மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் 3 நாட்கள் தொடர் மழை பெய்தும், பெரும் அளவில் மழை நீர் தேங்கவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 42 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட மொத்தம் 233 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கும் தடையின்றி உணவு பொருட்கள் வழங்கும் வகையில் 750 டன் அரிசி மாவட்டத்தில் உள்ள 294 ரேஷன் கடைகள் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் வகையில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, ஆணையாளர் நவேந்திரன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, இளையராஜா மண்டல தலைவர், பிரசன்னா, சங்கீதா, தி.மு.க. மாணவரணி பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்