அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23½ லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23½ லட்சம் மோசடி செய்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார்.;
அரசு வேலை
காட்பாடி தாலுகா கனகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 46). இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், எனது மகன் கல்லூரி படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தான். இந்த நிலையில் கடந்த ஆண்டு பள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் 2 பேர் வீட்டிற்கு வந்து மின்சார துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள்.
அதற்கு ரூ.13 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பி நான் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கொடுத்தேன். அப்போது அவர்கள் மேலும் 2 அரசுத்துறையில் வேலைகள் உள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இதுபற்றி சொல்லுங்கள் என்று கூறினர்.
ரூ.23½ லட்சம் மோசடி
அதன்பேரில் எங்கள் ஊரை சேர்ந்த உறவினர்களிடம் இதுபற்றி கூறி அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கி கொடுத்தேன். சிலநாட்களுக்கு பின்னர் 2 பேரும் உங்களுக்கு அரசு வேலை கிடைத்து விட்டது என்று அரசாங்க முத்திரையிட்ட பணி நியமன கடிதத்தை காண்பித்தனர். அதையடுத்து நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் ரூ.19½ லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.23½ லட்சம் கொடுத்தேன்.
ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தரவும், அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.