2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வருகிற 22-ந்தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம் - அண்ணா பல்கலைக்கழகம்

2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வருகிற 22-ந்தேதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-08-17 11:30 GMT

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டை நிறைவு செய்து, 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? என்பது தொடர்பான தகவலை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, பி.இ., பி.டெக்.(முழு நேரம்), பி.ஆர்க்.(முழு நேரம்), பி.இ., பி.டெக்.(பகுதிநேரம்), எம்.பி.ஏ. (முழு மற்றும் பகுதி நேரம்), எம்.பி.ஏ.(5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்) 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்(3-வது செமஸ்டர்) வருகிற 22-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த 3-வது செமஸ்டருக்கான வகுப்புகள் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெறும்.

அந்த வகையில், இந்த செமஸ்டருக்கான கடைசி வேலை நாட்கள் வருகிற டிசம்பர் மாதம் 8-ந்தேதி ஆகும். இந்த மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வு டிசம்பர் மாதம் 10-ந்தேதியும், செமஸ்டர் தேர்வு அதே மாதம் 21-ந்தேதியும் தொடங்கி நடைபெறும்.

செமஸ்டர் தேர்வு முடிந்து, அடுத்த செமஸ்டருக்கான(4-வது செமஸ்டர்) வகுப்புகள் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 23-ந்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரி, துறையின் பல்வேறு பாடத்திட்டம், இணை பாடத்திட்ட செயல்பாடுகளால் ஏற்படும் வகுப்பு இழப்பை, சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி ஈடுசெய்யலாம்.

மேற்கண்ட தகவல் அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.   

Tags:    

மேலும் செய்திகள்