2024 நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா..? - அண்ணாமலை பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.

Update: 2023-04-07 05:52 GMT

சென்னை,

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் அவர், விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் ஹெலிகாப்டரில் போர் நினைவு சின்னம் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் செல்கிறார். அங்கு அவர் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில், மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் சென்று ராமகிருஷ்ணா மடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்வதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை வரும் பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

பிரதமர் மோடியை யாரெல்லாம் பார்க்க வேண்டும் என எங்கள் மூலமாக கேட்டிருக்கின்றார்களோ அவர்கள் விவரங்களை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். பிரதமர் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் தான் இறுதி முடிவு செய்யும். தமிழகத்தில் இருந்து யாரெல்லாம் பிரதமரை பார்க்க வேண்டும் என விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரையும் பிரதமர் பார்க்கத்தான் போகிறார். பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளது. அதனால் பிரதமர் மோடியின் ஒவ்வொரு வருகையும் எழுச்சி தான். பிரதமர் மோடி அடுத்து தமிழகத்தில் வேறு வேறு பகுதிகளுக்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. பிரதமர் அவர்கள் எப்போதுமே தமிழர்களின் நலனை அவரது இதயத்தில் வைத்துள்ளார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பிரதமர் மோடி சென்னை வருவது மிகப்பெரிய விழாவாக இருக்கும். எல்லோருக்கு ஆனந்தம்...!

இவ்வாறு அவர் கூறினார்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்