ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருபுவனையில் மகளிர் போலீசாரை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது மனைவி லாவண்யா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடாஜலபதி 2-வது திருமணம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாவண்யா புகார் செய்தார். ஆனால் அந்த புகார் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக மகளிர் ஆணையத்தில் லாவண்யா முறையிட்டார். இதைத்தொடர்ந்து அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாதர் சங்கத்தினர் இன்று அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தொழிற்சங்க தலைவர் சிவசங்கரி தலைமை தாங்கினார். பூமாதேவி, புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனர். அகில இந்திய துணை தலைவர் சுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மகளிர் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.