சுண்ணாம்பாற்றில் மூழ்கிய சொகுசு படகு வீடு மீட்பு

சுண்ணாம்பாற்றில் மூழ்கிய சொகுசு படகு வீடு மீட்கப்பட்டது.

Update: 2022-05-08 17:28 GMT
சுண்ணாம்பாற்றில் மூழ்கிய சொகுசு படகு வீடு மீட்கப்பட்டது.
சொகுசு படகு வீடு
புதுச்சேரியில் சிறந்த பொழுதுபோக்கு தலமாக நோணாங்குப்பம் படகு குழாம் திகழ்கிறது. இங்கு சுற்றுலாத்துறை சார்பில், படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகில் பயணம் செய்தபடியே பாரடைஸ் பீச்சுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடலின் அழகை ரசிப்பார்கள். 
இதற்கிடையே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மந்த்ரா போட் ஹவுஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சொகுசு படகு வீடு இயக்கப்பட்டது. இந்த படகில் பயணம் செய்ய 24 மணி நேரத்திற்கு 2 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கூடுதலாக 1 நபர் தங்குவதற்கு ரூ.2,500 வசூலிக்கப்படுகிறது.
மூழ்க தொடங்கியது
சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த சொகுசு படகு வீடு  நோணாங்குப்பம் ஆற்றின் நடுவில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென வீசிய பலத்த காற்றால் படகு அங்குமிங்குமாக ஆடிக்கொண்டு மூழ்க தொடங்கியது. பாதியளவு மூழ்கிய நிலையில் நின்ற அந்த படகை சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
பராமரிப்பு பணிகள்
இதையடுத்து தனியார் ஒத்துழைப்போடு என்ஜின் பொருத்திய சிறிய ரக பைபர் படகு மூலம் கட்டி இழுக்கப்பட்டு படகு குழாம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சொகுசு படகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே விரைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சொகுசு படகு வீட்டை இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்