காவலாளியிடம் மோட்டார் சைக்கிள் ‘அபேஸ்’
ரெயில்வே போலீஸ் எனக்கூறி காவலாளியிடம் மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரெயில்வே போலீஸ் எனக்கூறி காவலாளியிடம் மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரெயில்வே போலீஸ்
புதுவை லாஸ்பேட்டை பாக்கமுடையான்பேட் ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28), காவலாளி. சம்பவத்தன்று கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடையில் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் ஒருவர் அமர்ந்து சாராயம் குடித்தார். அவர், வினோத்குமாரிடம், தான் விழுப்புரம் ரெயில்வே போலீசில் வேலை செய்வதாக அறிமுகம் செய்துகொண்டார்.
அப்போது, நீ என்ன வேலை செய்கிறார் என வினோத்குமாரிடம் கேட்டதற்கு, காவலாளியாக வேலைசெய்து வருவதாக கூறினார். இதையடுத்து அந்த நபர், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் காவலாளி வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை உண்மை என வினோத்குமார் நம்பினார்.
மது போதையில்
போதை மயக்கத்தில் இருந்த வினோத்குமாரிடம், அந்த நபர் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் தனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்க வேண்டியது உள்ளது. எனவே தன்னை அங்கு அழைத்து செல்லும்படி அவர் கூறினார். இதையடுத்து வினோத்குமார், தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து சென்றார்.
போகும் வழியில் அந்த நபர், தன்னிடம் பணம் இருப்பதால் பாருக்கு சென்று மது குடிக்கலாம் என வினோத்குமாரை அழைத்தார். உடனே அவர்கள் இருவரும் பாருக்கு சென்று குடித்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
பின்னர் அந்த நபர், தனது நண்பர் ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் வாங்க போகிறேன், அதற்கு உனது மோட்டார் சைக்கிளை கொடுக்கும்படி வினோத்குமாரிடம் கேட்டார். அவரும் மோட்டார் சைக்கிள் சாவியை கொடுத்தார். பின்னர் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற அந்த நபர் நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. அப்போது தான் வினோத்குமார் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.