கோவை மத்திய சிறையில் பெண் கைதி திடீர் சாவு

கோவை மத்திய சிறையில் வரதட்சணை கொடுமை வழக்கில் அடைக்கப்பட்ட பெண் கைதி திடீரென மரணமடைந்தார்.

Update: 2022-05-04 02:11 GMT
கோவை:

கோவை போத்தனூர் அருகே சிட்கோவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 60). இவருடைய மருமகள் கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் மருமகள் தற்கொலை செய்து கொண்டதாக கிருஷ்ணவேணி உள்பட குடும்பத்தினர் சிலர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் கிருஷ்ணவேணி உள்பட அவருடைய குடும்பத்தினருக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணவேணி கோவை மத்திய சிறையில் உள்ள பெண் தண்டனை கைதிகள் அடைக்கப்படும் பிரிவில் அடைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்