சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை:"அவசரத்தில் நடந்த தவறு"- மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கம்

மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு விளக்கம் அளித்தார்.

Update: 2022-05-03 08:30 GMT
மதுரை,

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக, டீனாக இருந்த ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

சர்ச்சையான உறுதிமொழி விவகாரம் குறித்து, துறை ரீதியாக மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் இருந்து மருத்துவ கல்வி இயக்குனரகத்தை சேர்ந்த சிறப்பு குழு ஒன்று மதுரை மருத்துவ கல்லூரிக்கு வந்தது.

இந்தநிலையில், சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயண பாபு விசாரணை கல்லூரியின் முதல்வராக இருந்த ரத்தினவேல், துணை முதல்வர் தனலட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல் ஆகியோரிடம் இன்று விசாரணை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறியதாவது:-

சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வரிடம் முதற்கட்ட விசாரணை நடந்துள்ளது, தேவைப்படும் பட்சத்தில் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்படும்.

சுற்றறிக்கையால் வந்த குழப்பத்தால்தான் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றுள்ளனர். NMC சுற்றறிக்கை பற்றி விளக்கம் பெறாமல் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.  தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையை தவறுதலாக பதிவிறக்கம் செய்து உறுதிமொழி எடுத்தனர்.

கொரோனாவுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சி என்பதால் அவசர கதியில் தவறு நடந்துள்ளது. யாரிடமும் ஆலோசிக்காமல் உறுதிமொழி வாசித்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். கல்லூரி முதல்வர், துணை முதல்வரிடம் ஆலோசிக்கவில்லை என மாணவர்கள் கூறினர்.

மருத்துவ கல்லூரிகளில் இப்போகிரேடிக் உறுதிமொழிதான் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பரிந்துரைத்தால் மீண்டும் ரத்தினவேலை கல்லூரி முதல்வராக நியமிக்க வாய்ப்புகள் ஏற்படலாம்.

இவ்வாறு மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயண பாபு கூறினார்.

மேலும் செய்திகள்